நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஜெயம் ரவி சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தை தொடங்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது படத்தை சுதா கொங்காரா இயக்கவுள்ளார். அதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார். இது ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100-வது படம்.
இதில் வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இறுதியாக ஜெயம் ரவி வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் புதிதாக இருக்கும் என தெரிவித்துள்ளது படக்குழு.
அதன்படி படப்பிடிப்பு தேதிகள் அனைத்தும் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ஜெயம் ரவி உறுதியளித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஜெயம் ரவிக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிக்கவிருந்த ‘புறநானூறு’ படத்தை தான் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தொடங்கவுள்ளார் சுதா கொங்காரா. சூர்யா – சுதா கொங்காரா இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் அவர்கள் மீண்டும் இணையவில்லை.