ஓபிஎஸ் – ஈபிஎஸ் பதவி சண்டை அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா என எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவது, நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும் என கூறி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்;
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு, அதன் பின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும்; பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பி.எஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் செய்ய வேண்டும், பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும், பின்னர் மற்றவை குறித்து தீர்மானிக்கலாம் எனவும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை, அழைப்பிதழ்தான் வழங்கப்பட்டுள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து வாதங்களை பெற்று கொண்ட நீதிபதிகள்; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை நாளை(08/07/22) மதியம் ஒத்திவைத்தது.