மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம்.மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மூலவராக யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.தயார் பெயர் நரசிங்கவல்லி என்பதாகும். ஆலய தீர்த்தம் சக்கர தீர்த்தமாகும். இது ஒரு குடவறைக் கோவிலாகும். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களிலேயே, மிகப்பெரிய உருவத்தை கொண்ட ஆலயம் இது என்பது தனிச் சிறப்பாகும்.
உரோமச முனிவர், தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி, இந்த யானை மலை தலத்திற்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார்.மேலும் நரசிம்மரை, அவரது நரசிம்ம அவதார கோலத்திலேயே தரிசிக்கவும் விரும்பினார். இறைவனும் உரோமச முனிவரின் விருப்பப்படியே, உக்கிர நரசிம்மராக தோன்றி காட்சி தந்தார்.
ஆனால் நரசிம்மரின் உக்கிர கோல வெப்பத்தால் உலகமே தகித்தது. இதனை தாங்கிட முடியாமல், தேவர் களும், முனிவர்களும் பிரகலாதனிடம் சென்று முறையிட்டனர். பிரகலாதனும் இத்தலத்திற்கு வந்தார். ஆனால் நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர, வெப்பம் முற்றிலும் நீங்கவில்லை.
இதையும் படிங்க: மதுரையில் அன்னை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது!!
இதையடுத்து அன்னை மகாலட்சுமியிடம் அனைவரும் முறையிட்டனர். மகாலட்சுமியும் இத்தலத்திற்கு வந்தார்.அதன்பிறகே நரசிம்மரின் உக்கிரம் முழுமையாக மாறி தணிந்தது. மேலும் அன்னை மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்தபடி, யோக நரசிம்மராக, கேட்டதை வழங்கும் வள்ளலாக இத்தலத்தில் நரசிம்மர் அருள்புரிகிறார்.
இத்தலத்தில் இருக்கும் யோக நரசிம்மர், தன் மார்பினில் மகாலட்சுமியை தாங்கியபடி மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லை. இதற்குக் காரணமாக செவி வழிச் செய்தி ஒன்று சொல்லப்படுகிறது.
பொதுவாக கொடி மரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீளம், அகல அளவைப் பொறுத்ததே. ஆனால் இத்தலத்தில் கருவறைக்கு மேல், யானை மலை மிகவும் உயர்ந்து காணப்படுவதால் கொடி மரம் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நரசிம்மராக அவதாரம் எடுத்தது, தேய்பிறை சதுர்த்தி காலத்தில் தான். எனவே அந்த நேரத்தில் இந்த யோக நரசிம்மரை வழிபட்டால், கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிரி பயம் விலகும்.
இதையும் படிங்க: ஏழு தலைமுறைகளைக் காக்கும் குலதெய்வ ஸ்லோகம்!
மரண பயம் அகலும். அதே போல் நரசிங்கவல்லி தாயாரை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். கோபம் குறைந்து அமைதியான வழியில் செல்ல வழி ஏற் படும் என்பது அனுபவ உண்மையாகும்.
இந்த ஆலயத்தின் அருகே உள்ள தீர்த்தத்தில் மாசி மாத பவுர்ணமி தினத்தன்று கஜேந்திர மோட்ச விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.திருவண்ணாமலையைப் போலவே இங்கும் ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் நடைபெறுகிறது.
இத்தலத்தில் சிவபெருமானுக்கு நடக்கிற பிரதோஷம் போல, நரசிம்மருக்கு பிரதோஷ பூஜை நடப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது யானை மலை ஒத்தக்கடை. இங்கிருந்து மினி பஸ்களில் 2 கிலோமீட்டர் மேற்கே சென்றால் கோவிலை அடையலாம்.