ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
“வரம்பில் இன்பம் உடையவரும், விருப்பங்களை அளிப்பவரும், வணங்கியவரின் மனக்கவலைகளைத் தீர்ப்பதில் வல்லுநரும், காட்டைத் தீ அழிப்பதுபோலத் தன் நாமத்தை உச்சரித்த அளவில் பிறவிக் கடலைக் கடக்கச் செய்கின்றவருமான மேதா தெட்சிணாமூர்த்தியை துதிப்போம்.
தனிப்பெருமை வாய்ந்த தெட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்ற மயிலாடுதுறை ஸ்ரீ வழிகாட்டும் வள்ளல்
என்றழைக்கப்படுகின்ற ஸ்ரீ வேதாரண்யேசுவரர் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்வதில்
ஐ தமிழ்த் தாய் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது.
ஜீவ நதியான காவிரியின் புனித இடங்களில் ஒன்றாக கருதப்படும், மயிலாடுதுறை துலாக்கட்டத்தின் வடகரையில், ஸ்ரீ வழிகாட்டும் வள்ளல் திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமியின் கர்ப்பக் கிரகத்தின் தென்பக்கத்தில் நந்தியம்பெருமாள் மீது மேதா தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருப்பதுதான் இத்தலத்தின் தனி சிறப்பாகும்.இவர் யோகாசனத்து ஞானமுத்திரைச் சையராக வீற்றிருக்கிறார். இதுபோல வேறெந்த தலத்திலும் தெட்சிணாமூர்த்தியைக் காண இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
மகா மண்டபத்தில் ஸ்ரீ காவிரி அம்மன், ஸ்ரீ கங்கை அம்மன் , சிவகாமி சமேத நடராஜர் மற்றும் சமயக்குரவர்கள் நால்வர் வீற்றுள்ளனர். பிரகாரத்தில் நாதசர்மா, சுப்பிரமணியர், மகாலட்சுமி, துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், பிரம்மலிங்கம், அகஸ்தியலிங்கம் சனீஸ்வரர், அங்காரகன், சூரிய பகவான், சந்திரன், மற்றும் சப்தமாதர்கள் ,விநாயகர் ஆகியோர் அமைந்து அருள்பாலிக்கிறார்கள்.
கார்த்திகை சோமவாரத்தில், காவிரியில் நீராடி, இத்தல சுவாமி, அம்பாளை முறைப்படி வழிபடுபவர்கள் அதன்பின் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வணங்கினால், பொன்னையும், மெய்ப்பொருளையும், எய்துவர் என்பது ஐதிகம்.
“சிவபெருமானை சுமந்து செல்லும் அளவிற்குப் பெரியவனாகவும், வலிமையானவனாகவும் தாமே இருந்ததாக நந்திதேவர் கர்வம் கொண்டார். அவருக்குப் பாடம் கற்பிக்க, சிவபெருமான் தமது ஜடாமுடி ஒன்றை எடுத்து கீழே போட்டார்.
இந்த ஒற்றை முடியின் எடையைத் தாங்க முடியாமல், மனம் நொந்த நந்திதேவர் ” அறியாது செய்த பிழைப் பொறுத்தருள வேண்டி மன்னிப்புக் கோரினார்.இறைவன் மனமிரங்கி நந்திதேவருக்கு மேதா தெட்சிணாமூர்த்தியாக மாறி, ஞானஉபதேசம் செய்து, அவரையே வாகனமாக்கிக் கொண்டார். சிவனின் வழிகாட்டுதலின்படி நந்திதேவர் புனித துலாக் காட்டத்தில் நீராடி, இத்தலத்து ஈசனை வணங்கி அருள்பாலிக்கிறார்.
துலாக்கட்டம் காவிரி ஆற்றில் நந்திதேவர் தபஸ் செய்யும் சிலை உள்ளதை இன்றும் தரிசிக்கலாம்.
இதனால், அவர் ” கங்கா அனுகிரஹ ஸ்ரீ மேதா தெட்சிணாமூர்த்தி ” என்றும் அழைக்கப்படுகிறார்.
தேவகுருவான பிரகஸ்பதி ஒருமுறை, தோஷம் காரணமாக, குரு பதவியை இழந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள தெட்சிணாமூர்த்தியை வழிபட்டதன் மூலம் தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இக்கோயில் குரு பரிகாரத்தலமாகவும் கருதப்படுகிறது
ஐம்பொறிகளையும் வென்றவர் என்ற பெருமைக்குரிய கண்ணுவ மகலிஷி, கங்கையில் நீராட விருப்பம் கொண்டு, இத்தலம் தாண்டி செல்லுகின்றபோது, ஒளியிழந்த, கருமைநிற மூன்று பெண்கள் அவரை வழிமறித்தனர்.
அதனால் கோபம் கொண்ட முனிவர், ” சண்டாள பெண்களே… முனிவனாகிய என்னை வழிமறிக்கக் காரணம் என்ன ?” என்று வினவினார். அப்போது அந்த கன்னியர்கள் “நாங்கள் சண்டாள பெண்கள் அல்ல. கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிக்குரிய தெய்வங்கள். எங்களிடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் பாவங்களை போக்க நீராடியதால், நாங்கள் ஒளி இழுந்து புனிதம் கெட்டு இத்தகையரானோம் எங்களை கண்டு வெறுக்காதீர்கள். நாங்கள் இங்குள்ள காவிரியில் நீராடி ஞானகுருவை வழிபட்டு எங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள வந்துள்ளோம்” என்றார்கள், அதனைக் கேட்டு முனிவர், கங்கை செல்லும் விருப்பத்தை விட்டுவிட்டு, இந்த வள்ளலார் கோயிலை அடைந்து, இங்கேயே ஒரு ஆசிரம் அமைத்துத் தங்கி, தினமும் காவிரியில் நீராடி, ஈசனை வழிபட்டு முக்தி பெற்றார்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் இங்குள்ள துலாக்கட்ட காவிரியில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி, தங்களை புனிதப்படுத்திக் கொள்கின்றன என்கிறது” புராண வரலாறு.
மயிலாடுதுறை நகரத்திற்கு பெருமை சேர்ப்பதே, ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலாக்கட்ட உற்சவ விழாதான்.
தல சிறப்புகள் பற்றி ராஜேஸ் சிவாச்சாரியார் சொல்லக் கேட்போம்
கல்வியில் சிறந்து, பதவிகளில் உயர்ந்து, வாழ்வில் வளம்பெற இத்தலத்தில் வந்து வழிபாடு செய்கின்றனர். அத்துடன் புனித நதிகள் எல்லாம் பாவம் போக்கும் புண்ணியத் தலமாக விளங்கும் இந்த ஆலயத்தைத் தரிசித்த உங்களை, மீண்டும் ஓர் அற்புதமான ஆலயத்தில் சந்திக்கும்வரை, உங்களிடம் இருந்து விடைபெறுவது ஐ தமிழ்