வரும் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை சென்னை – திருப்பதி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்..
“சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் நடைபெற உள்ள தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
இந்த அறிவிப்பின்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 6 25 மணிக்கு புறப்படும், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல் 2:15 மணிக்கு புறப்படும், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், மாலை 4.35 மணிக்கு புறப்படும், கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய மூன்று ரயில்கள் செப்டம்பர் 28 முதல் அக்.12ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில்,காலை 10.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் காலை 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.