UchiNadar Temple-Shivapuri – History : உச்சி நாதர் கோவில் – சிவபுரி
இக்கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப் பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.
சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர்.
சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து vவழிபாடு செய்துள்ளார். சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன.
இதையும் படிங்க : மதுரை கள்ளழகர் திருவிழா – நீர் பீய்ச்சி அடிக்க கடும் கட்டுப்பாடு..!!!
அப்பகுதி” ஒரு காலத்தில் திருநெல்வாயில்’ என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோயில் அமைந்துள்ளது. சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.
UchiNadar Temple-Shivapuri – History : ஸ்தல வரலாறு :
திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் அவதரித்தார். தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார்.
தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, “அம்மா! அப்பா!’ என அழுதார்.
இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை.
பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, “”பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,” எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.

உடனே சிவபார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை நீட்டிய சம்பந்தர், “தோடுடைய செவியன்’ என்ற பதிகம் பாடினார். தன் குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து ஆச்சரியமடைந்தார் சிவபாதர்.
சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது. மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு அவர் சென்றார்.
செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர்.
சம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோயில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார்.
இதனால் இக்கோவிலின் இறைவன் “உச்சிநாதர்’ என்றும் “மத்யானேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் கனகாம்பிகை. இப்பகுதி மக்கள் இக்கோயிலை “கனகாம்பாள் கோயில்’ என்று அழைக்கின்றனர்.
செல்லும் வழி :
சிதம்பரத்திலிருந்து கவரப்பட்டு செல்லும் வழியில் 3 கி.மீ., தூரத்தில் சிவபுரி கோயில் உள்ளது.
இதையும் படிங்க : கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 19 கல்லூரிகள் திறப்பு – கல்லூரி கல்வி இயக்குநர்