இந்தியா சார்பில் ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் போட்டியிட ஒரு படம் பரிந்துரைக்கப் படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடம், ஆமிர்கான் தயாரிப்பில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய ‘லாபதா லேடீஸ்’ என்ற இந்திப் படத்தை அனுப்புவதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு, சமீபத்தில் அறிவித்தது.
அனால், இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக “இந்தி திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக ‘லாபதா லேடீஸ்’ திரைப்படத்தைத் தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
‘லாபதா லேடீஸ்’ பல்வேறு கருத்துகளை நகைச்சுவையோடு சொன்னாலும் உணர்வுப்பூர்வமாக இல்லை என்பதே உண்மை” என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மேலும், இயக்குநர் வசந்தபாலன், “லாபதா லேடீஸ் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்துக்காகவும் உருவாக்கப்பட்ட, ஃபீல் குட் டிராமா திரைப்படம். அதை விட, கொட்டுக்காளியையோ, உள்ளொழுக்கு, அல்லது ஆடுஜீவிதம் படத்தையோ இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பி இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில், “கேன்ஸ் பட விழாவில் விருதுபெற்ற பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine As Light) படத்தை அனுப்பியிருந்தால் கண்டிப்பாக விருது பெற்றிருக்கும் என்றும், ஆனால், ஒரு நல்ல வாய்ப்பை மீண்டும் ஒரு முறை இழந்துவிட்டோம்” என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.