உஸ்பெகிஸ்தானில் 3 நாட்களாக லிஃப்டிற்குள் சிக்கித் தவித்த இளம் பெண் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 24 ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் நாட்டில் தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த 32 வயதுடைய ஓல்கா லியோன்டிவா என்ற பெண் காணாமல் போயுள்ளார்.
வேலைக்குச் சென்ற ஓல்கா லியோன்டிவா மாலையில் வீடு திரும்பாததால் அச்சத்திற்குள்ளான அவரது உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், 3 நாட்களுக்கு பின்னர் லியோன்டிவாவை லிஃப்டிற்குள் இருந்து காவல் துறையினர் சடலமாக மீட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில்,
கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று லியோன்டிவா 9 மாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்டில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறால் லிஃப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. இந்நிலையில் லிஃப்டிற்குள் அடைபட்ட நிலையில், லியோன்டிவா கத்தி கூச்சலிடடுள்ளார். ஆனாலும், அவரது சத்தம் வெளியில் கேட்காததால் வெளியில் இருந்து யாரும் அவருக்கு உதவவில்லை.
இந்நிலையில், மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட லியோன்டிவாவால் 3 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அந்த பெண்ணிற்கு 6 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
அதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சீனாவை சேர்ந்த லிஃப்ட் நிறுவனத்தின் மீது காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லிஃப்டில் இளம் பெண் உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இதேபோன்று கடந்த 26 ஆம் தேதி அன்று இத்தாலி நாட்டில் 61 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மின் தடை ஏற்பட்டதால் லிஃப்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.