சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு வேளச்சேரியில் அடிக்கல் நட்டு தொடங்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
சென்னை–வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பால பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் ஒரு வழித்தடத்தை, நவம்பர் 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
வேளச்சேரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 2016ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது, 108 கோடி ரூபாயில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஒரு வழித்தடம் தரமணி சாலையில் இருந்து, விரைவு சாலை வரை, 36 துாண்கள் கொண்டது. இதன் மைய பகுதி, 50 அடி உயரம் கொண்டது. அதே போல், விரைவு சாலையில் இருந்து தாம்பரம் சாலை வரை, 17 துாண்கள் அமைத்து பாலம் கட்டப்படுகிறது.
இதன் மைய பகுதி, 25 அடி உயரம் கொண்டது. இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், தரமணி – விரைவு சாலை வழித்தடத்தை, நவம்பர் 1ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
அதே போல், கோயம்பேடு 100 அடி சாலை-காளியம்மன் கோவில் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 100 அடி சாலை-காளியம்மன் கோவில் சாலை, புறநகர் பஸ் நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
ரூ.94 கோடி செலவில் 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பணிகள், கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேம்பாலப்பணி நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற நவம்பர் 1ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது.