உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024 தொடரில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியது .
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024 தொடரின் முதல் சீசன் இங்கிலாந்தில் கடந்த 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
இதில், இந்தியா சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ், தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் சாம்பியன்ஸ் தொடர் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் இதிலும் இந்திய அணி சிறப்பான பங்களிப்பை கொடுத்து கெத்து காட்டி வந்தது.
இந்த தொடருக்கான இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில், இர்பான் பதான், யூசுப் பதான், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு ஆகியோர் அணியில் இடம் பெற்றிருந்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றன .
இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது.
Also Read : டிரம்ப் மீது மட்டுமில்லை என்மீதும் கொலை முயற்சி நடந்துள்ளது – எலான் மஸ்க்
இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சாம்பியன்ஸ் அணி பேட்டிங் செய்தது . அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு களமிறங்கினர்.
இதில், உத்தப்பா 10 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 4 ரன்களில் நடையை கட்டினார். அதிரடியாக விளையாடிய ராயுடு 30 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் கைகோர்த்த யுவராஜ் சிங் மற்றும் இர்பான் பதான் இருவரும் இணைந்து இந்தியா சாம்பியன்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் இந்தியா சாம்பியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி வென்று சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.