கமுதி அருகே குண்டும் குழியுமான சேதமடைந்த சாலையால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது . இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கமுதி அருகே உள்ளே கே.நெடுங்குளம், புதுக்கிராமம், . தலைவன் நாயக்கன்பட்டி திருச்சிலுவையாபுரம் உள்ளிட்ட எட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இச்சாலையானது இப்பொழுது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது .
தற்பொழுது பெய்த மழையின் காரணமாக சாலையில் பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள்ளும், பொதுமக்களும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
சாலை இப்படி சேதமடைந்து கிடப்பதால், அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் இந்த கிராமங்களுக்கு வரவில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்
மேலும் கமுதியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த சாலையை கடக்க 40 நிமிடங்கள் ஆவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, மற்றும் கல்லூரிக்கும், வேலைக்கும் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறனர்.
இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் சாலையில் விழுந்து விபத்து ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகவும், அடிக்கடி வாகனங்கள் பஞ்சர் ஆவதாகவும் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் அடிக்கடி பஞ்சர் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
ஓட்டு கேட்க மட்டும் எங்களைத் தேடி வரும் அரசியல்வாதிகள், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற செவி சாய்ப்பதில்லை என்பதும், அவர்களின் விசும்பலாக உள்ளது.
சீரழிந்து கிடக்கும் சாலைகளுக்கு எப்போது விமோசனம் கிடைக்குமோ?