இன்று நடிகர் விக்ரமின் தங்கலான் பட டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான். இந்த படம் கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தோற்றத்தில் வித்தியாசம் காட்டும் விக்ரம் இந்த படத்திலும் தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். சியான் விக்ரமின் தோற்றமும், நடிப்பும் தாறுமாறாக உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தங்கலான் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப்பில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன.
தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த டீசரில் ஒரு ராஜ நாகத்தின் தலையை சியான் விக்ரம் தனது கையால் பிய்த்து எறியும் காட்சிகளை பார்த்து மெர்சலான ரசிகர்கள் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக இருக்கும் என கூறி வருகின்றனர்.