koothandavar temple- சித்திரை பெருவிழா முன்னிட்டு கூத்தாண்டவர் கோயிலில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள் கும்மியடித்து ஆடிப்பாடி கொண்டாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா மாரியம்மன் கோயில் அருகில் கடந்த 9ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இந்த திருவிழாவிற்கு அப்பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் வேலூர், தொட்டி, சிவிலியாங்குளம், பந்தலடி உள்ளிட்ட கிராமக்களில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் கொண்டு வந்த கூழ் குடங்களை வைத்து படையல் வைத்து பூஜைகள் நடைப்பெற்றது.
இதையும் படிங்க: மதுரையில் அன்னை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது!!
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று மாலை சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொண்டு கோயில் அருகில் கற்பூரங்களை ஏற்றி அரவானில் பெருமைகளை கூறி கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து சித்திரை தேரோட்டம் நடைபெற்ற நாளன்று இரவு பூசாரி கையினால் கட்டிய தாலியை அறுத்து தலைமுழுகி வெள்ளை புடவை உடுத்தி வளையல்களை உடைத்தும், ஒப்பாரி வைத்து அழுது சோகமாக வீடு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.