சுரங்கப் பாதையில் சிக்கியவர்களின் நிலை குறித்து உத்தராகண்ட் முதல்வரிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.
சுரங்கப் பாதை விபத்து:
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசியில் கேட்டு அறிந்து உள்ளார்.
இது தொடர்பாக உத்தராகண்ட் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தொழிலாளர்கள் சுரங்கப் பாதையில் சிக்கியதை அடுத்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது மீட்புப் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
சுரங்கப் பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்றும், போதுமான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் அப்போது பிரதமர் கூறினார். மத்திய – மாநில அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் போதுமான உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களின் மன உறுதியைப் பேணுவது மிகவும் முக்கியம் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்த உரையாடலின்போது, தொழிலாளர்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன், சத்தான உணவு, குடிநீர் ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதை பிரதமருக்கு முதல்வர் தெரிவித்தார். நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் முதல்வர் எடுத்துரைத்தார்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.