மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது என முஹம்மது நபிகள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் பெரிதும் மதிக்கின்ற இறைத்தூதர் முஹம்மது நபிகள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக அரசு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், ஈரான், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. குவைத், ஈரான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்திய தூதரகங்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க சொல்லி சம்மன் அனுப்பின.
முஹம்மது நபி குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதை கண்டித்து சம்மன் அனுப்பியதோடு மட்டுமல்லாமல், அரபு நாடுகளில் உள்ள கடைகளில் இந்திய தயாரிப்பு பொருட்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பெரும்பாலான கடைகளில் இந்திய தயாரிப்புகள் அகற்றப்பட்டது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த சர்ச்சை தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சங்க பரிவாரம் மீண்டும் நம் நாட்டினை அவமதித்துள்ளது. உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் நமது மதச்சார்பற்ற ஜனநாயகம், பாஜக செய்தித் தொடர்பாளரின் அவமதிப்புப் பேச்சால் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
Sangh Parivar has once again disgraced our revered secular democracy before the world, with the derogatory remarks made by BJP spokespersons against Prophet Muhammad. It's high time to raise unanimous voice against the forces of bigotry. pic.twitter.com/zPJo7dHQlU
— Pinarayi Vijayan (@pinarayivijayan) June 7, 2022
முன்னதாக நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த பினராயி விஜயன், “ஆர்எஸ்எஸ் தேசத்தை தர்மசங்கடமான சூழலுக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. வெறுப்புப் பிரச்சாரங்களை செய்வோர் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேச வேண்டும் என்பது சங்க பரிவாரத்தின் கொள்கையிலேயே இருக்கிறது. இந்தப் பேச்சு சமூக பாதுகாப்புக்கு மட்டும் உலை வைக்கவில்லை தேசத்தின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியிருந்தார்.
ஜிசிசி நாடுகளான குவைத், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், யுஏஇ.,யுடன் இந்தியா கடந்த 2020-21 காலகட்டத்தில் 90 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது. ஜிசிசி நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர். வசிக்கின்றனர். பிரதமரமாக பதவியேற்ற பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் மோடி இந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக் கருத்துகளால் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.