மணிப்பூரில் ஜூன் 15-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் (closed) என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மணிப்பூரில் மேதேயி இன மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து கடந்த 3-ம் தேதி குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்ற நிலையில், மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் கலவரமானது.
இதனால், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், இந்த கலவரத்தில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்த வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், வருகிற ஜூன் 15-ம் தேதி வரை மணிப்பூரில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று மணிப்பூர் சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வன்முறையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு படையினரின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று குகி பழங்குடியின சமுகத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், வன்முறை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மோதல் போக்கை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்களிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கோரிக்கை விடுத்தார்.